Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஹனு-மான் பட வசூல் ராமர் கோயிலுக்கு நன்கொடை: சிரஞ்சீவி தகவல்

ஐதராபாத்: இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். பேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார்.

ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார். பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘ஹனு-மான்’ வெளியாகிறது. தமிழில் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது. பட நிகழ்வு ஐதராபாத்தில் நடந்தது. இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசுகையில், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல் நிகழ்வாகும்.

இம்மாதம் 22ம் தேதியன்று ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதில் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வேன். ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ‘ஹனு-மான்’ படக் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த செய்தியை படக் குழு சார்பாக நான் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன்’ என்றார்.