சென்னை: ராம் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் கலையரசன், பிரியாலயா, பிரேம் குமார், பெசன்ட் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘டிரண்டிங்’. சிவராஜ் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கலையரசன் பேசுகையில், “என் திரை வாழ்வில் இது முக்கியமான படம், இப்படம் ஹிட்டாகும். கதை கேட்கும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறைந்த நடிகர்களை வைத்து 2 மணி நேரம் ரசிகர்களை உட்கார வைப்பது சுலபம் கிடையாது.
அந்த வேலையை இந்த படம் செய்திருக்கிறது. சினிமாவில் இயக்குநர் தான் கடவுள் என்று நினைக்கிறேன். சில படங்களில் நான் நடித்திருப்பேன். ஆனால் தியேட்டரில் பார்த்தால் அப்படத்தில் இருக்க மாட்டேன். அதை நினைத்து சில நேரங்களில் வருத்தம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரை உலகில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள், ஆனால் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது. நான் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நண்பர் என்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. சிலர் என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்” என பகிரங்கமாக நடிகர் கலையரசன் பேசினார். தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த், நிர்வாகத் தயாரிப்பாளர் காந்த் உள்பட பலர் பங்கேற்றனர்.
