Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கன்னட மக்களை புண்படுத்துவது நோக்கமல்ல: கர்நாடக பிலிம்சேம்பருக்கு கமல் கடிதம்

சென்னை: தக் லைஃப் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் திரையிடப்படும் என கன்னட திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து கன்னட பிலிம் சேம்பருக்கு கமல்ஹாசன் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. ராஜ்குமாரின் குடும்பத்தினர், குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் ‘தக் லைஃப்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு இருப்பது, எனக்கு வேதனை அளிக்கிறது.

நான் சொன்ன வார்த்தைகள், நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும், கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையும் மட்டுமே வெளிப்படுத்தின. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ, விவாதமோ இல்லை. தமிழைப் போலவே, கன்னடமும் நான் நீண்ட காலமாகப் போற்றும் பெருமைமிக்க இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதோ அல்லது பகைமையை ஏற்படுத்துவதோ இந்த அறிக்கையின் நோக்கம் அல்ல.

சினிமா மக்களுக்கு இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும், ஒருபோதும் அவர்களைப் பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. இதுவே எனது அறிக்கையின் நோக்கம், பொது அமைதியின்மைக்கும் பகைமைக்கு நான் ஒருபோதும் இடம் கொடுத்ததில்லை, ஒருபோதும் அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. எனது வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்படும். கன்னட மக்கள் அவர்கள் தாய் மொழி மீது வைத்திருக்கும் அன்பின் மீது எனக்கும் மரியாதை உண்டு. இந்த தவறான புரிதல் தற்காலிகமானது என்றும், நமது பரஸ்பர அன்பையும் மரியாதையையும் மீண்டும் வலியுறுத்துவதற்கான இது ஒரு வாய்ப்பு என்றும் நான் மனதார நம்புகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கடிதத்தில் கூறியுள்ளார்.