Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கண்ணப்பாவில் முன்னணி நடிகர்கள் ஏன்?: விஷ்ணு மன்ச்சு பதில்

சென்னை: தெலுங்கு ஹீரோ விஷ்ணு மன்ச்சு நடித்துள்ள பான் இந்தியா படம், ‘கண்ணப்பா’. இந்தியில் ‘மகாபாரதம்’ டி.வி தொடரை இயக்கியிருந்த முகேஷ் குமார் சிங் இப்படத்தை இயக்கியுள்ளார். கடவுள் சிவனை வழிபட்ட அவரது தீவிர பக்தர் கண்ணப்பரை பற்றிய சம்பவங்கள் இடம்பெறும் இதில், கண்ணப்பர் வேடத்தில் விஷ்ணு மன்ச்சு நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் சரத்குமார், பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன், பிரம்மானந்தம், மோகன் பாபு நடித்துள்ளனர். ஏவிஏ என்டர்டெயின்மென்ட், 24 ஃபிரேம் பேக்டரி சார்பில் நடிகர் மோகன்பாபு தயாரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 25ம் தேதி ரிலீசாகும் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சரத்குமார், பிரீத்தி முகுந்தன், பிரபுதேவா, எடிட்டர் ஆண்டனி, முகேஷ் குமார் சிங் கலந்துகொண்டனர். அப்போது விஷ்ணு மன்ச்சு பேசியதாவது: நான் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் தமிழில் சரளமாக பேசுவேன். நேரடி தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற பல வருட ஆசை, ‘கண்ணப்பா’ தமிழ் வெர்ஷன் மூலம் நிறைவேறியுள்ளது. மூன்று பாடல் காட்சிகளுக்கு பிரபுதேவா நடனக்காட்சி வடிவமைத்துள்ளார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு கண்ணப்பரை பற்றிய வரலாறு தெரிய வேண்டும் என்ற நோக்கத்துக்காக படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், பட்ஜெட் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. முன்னணி நடிகர், நடிகைகள் படத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு கேரக்டருக்கும் அவர்கள் பொருந்தி இருந்ததால் நடிக்க வைத்துள்ளோம். நான் அழகானவன் கிடையாது. கடவுளின் அருளால் ஹீரோவாக நடிக்கிறேன்.