Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மாமன்னன் கடைசி படம் என்ற முடிவை மாற்ற மாட்டேன்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம், ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 29ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி: மாரி செல்வராஜ் இயக்கிய ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களைப் பார்த்து, அவரது இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அப்போது அவர் வெவ்வேறு படங்களை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். சம்பந்தப்பட்ட நபர்களிடம் நான் பேசி, ‘இது என் கடைசி படம்’ என்று கேட்டுக்கொண்டதால் விட்டுக்கொடுத்தனர். தந்தை, மகனுக்கு இடையிலான உறவு மற்றும் பிரச்னைகள் குறித்து சொல்லும் ‘மாமன்னன்’ படம், முழுமையான அரசியல் பின்புலம் கொண்ட கதையாகும். படத்தில் வடிவேலு மாமன்னன், நான் மன்னன் என்று சொல்லலாம். ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நான் பேசிய ஒரு வசனம், இப்படத்தில் ஒரு காட்சியாகவே இடம்பெறுகிறது. இதுதான் என் கடைசி படம். அந்த முடிவை மாற்றும் எண்ணம் எனக்கு இல்லை. கமல்ஹாசன் தயாரிப்பில் நான் நடிக்க வேண்டிய படம் கைவிடப்பட்டது. நான் அமைச்சரானவுடனே அவரிடம், ‘இப்படத்தில் என்னால் நடிக்க முடியாது’ என்று சொன்னேன். ‘அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். திரைப்பணியை விட, மக்கள் பணி மகத்தானது. இந்தக்கதை உங்களுக்காக காத்திருக்கும்’ என்று சொல்லி என்னை வாழ்த்தினார். சமீபத்தில் ‘மாமன்னன்’ படத்தைப் பார்த்த கமல்ஹாசன் என்னையும், மாரி செல்வராஜையும் பாராட்டினார்.

நான் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் நடிக்கும்போது, ‘மாமன்னன்’ எனது கடைசி படம் என்பதில் உறுதியாக இருந்தேன். முதலில் நான் சினிமாவுக்கு வரமாட்டேன் என்றேன். பிறகு வந்தேன். அடுத்து, நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றேன். ஆனால், அரசியலுக்கு வந்து அமைச்சராகவும் ஆகிவிட்டேன். இப்போது என் முன்பு மக்களுக்கான பணிகள் நிறைய காத்திருக்கிறது. அவற்றை எல்லாம் செய்து முடிக்க வேண்டும். மிஷ்கின், மகிழ் திருமேனி போன்றோர் இயக்கத்தில் நடிக்க விரும்பினேன். அது நிறைவேறியது. கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதுவதாக இருந்தது. ஆனால், அந்த விருப்பம் மட்டும் நிறைவேறவில்லை. ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் உள்பட அனைவருடைய கடுமையான உழைப்பில் ‘மாமன்னன்’ படம் சிறப்பாக உருவாகியுள்ளது.