Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு

பி.எஸ்.எஸ் புரொடக்‌ஷன்ஸ், உத்ரா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘எண்.6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’ என்ற படம், வரும் 15ம் தேதி திரைக்கு வருகிறது. ‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’, ‘வில்வித்தை’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கிய செ.ஹரி உத்ரா, இப்படத்தை எழுதி இயக்கி, எஸ்.பிரீத்தி சங்கருடன் இணைந்து தயாரித்துள்ளார். கிராமங்களில் இருந்து இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கால்பந்து விளையாட்டில் முத்திரை பதிக்க வேண்டும் என்கிற ஆர்வத்துடன் துடிக்கும் கூலித்தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பிறகு எவ்வாறு கால்பந்து விளையாட்டில் தங்களுக்கான இடங்களை திறமையின் மூலம் பிடிக்க முயற்சிக்கின்றனர் என்பதை மையப்படுத்தி, இதில் மறைந்துள்ள அரசியலைப் பற்றியும் படம் பேசுகிறது.

ஒடுக்கப்பட்டவர்களை அதிகார வர்க்கம் எவ்வாறு அவர்களின் திறமைகளை ஒடுக்கி, முன்னுக்கு வரவிடாமல் தடுக்கிறது என்பது குறித்து பேசும் இப்படத்தில் சரத், அயிரா, கஞ்சா கருப்பு, அருவி மதன், சோனா, நரேன், இளையா, எஸ்.எம்.டி.கருணாநிதி நடித்துள்ளனர். வினோத் ராஜா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலிமிர்ஸா இசை அமைத்துள்ளார். குவைத் வித்யாசாகர், பா.இனியவன், செ.ஹரி உத்ரா பாடல்கள் எழுதியுள்ளனர். பரமக்குடி, மதுரை, ராம்நாடு ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. முந்நூறுக்கும் மேற்பட்ட நிஜ கால்பந்து விளையாட்டு வீரர்கள் நடித்துள்ளனர்.