Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஸ்ரீகாந்த் படத்தில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன்: ஜோதிகா

சென்னை: பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், ஜோதிகா, ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் ஆகியோர் நடித்துள்ள இந்தி படம், ‘ஸ்ரீகாந்த்’. வரும் 10ம் தேதி திரைக்கு வருகிறது. இதை துஷார் ஹிரா நந்தானி இயக்கியுள்ளார். பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்‌ஷி, சாஸெட்-பரம்பரா, வேத் சர்மா இசை அமைத்திருக்கின்றனர். பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ், சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்‌ஷன் சார்பில் பூஷன் குமார், கிருஷ்ணகுமார், நிதி பார்மர் ஹிரா நந்தானி இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் படம் குறித்து ஜோதிகா பேசியதாவது: இது மிகவும் இன்ஸ்பிரேஷன் நிறைந்த ஒரு கதை. திரையில் துணிச்சலாக சொல்லப்பட்டு இருக்கிறது. இதில் நடித்ததற்காக பெருமைப்படுகிறேன். எனது திரைப்பயணத்தில் இது ஒரு முக்கியமான படமாகும். ஸ்ரீகாந்த் பொல்லாவை பற்றி கேட்டபோது மிகவும் வியப்பாக இருந்தது. அவரை நேரில் சந்தித்து பேசிய பின்பு, வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றிலும் மாறிவிட்டது.

குறிப்பாக, பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குறித்த என் பார்வை மாறி விட்டது. அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும், பொதுவெளியில் அவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதையும் குறித்து நிறைய கேள்விகள் எழுந்தது.  இப்படம் கண்டிப்பாக பலரது அகக்கண்களை திறக்கும். ரிலீசுக்குப் பிறகு பார்வைத்திறன் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குறித்து நாம் கொண்டிருக்கும் பார்வையில் ஒரு மாற்றம் ஏற்படும்.

‘காக்க காக்க’, ‘ராட்சசி’ ஆகிய படங்களுக்குப் பிறகு இதில் நான் ஆசிரியை கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்தியில் இது எனது 3வது படம். திரைப்படங்களில் பணியாற்ற மொழி எப்போதும் தடையாக இருந்தது இல்லை. தொடர்ந்து ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட திரைப்படங்களில் நடிப்பேன். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை.