Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

புஷ்பா 2 டிக்கெட் விலை ரூ.3000: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

மும்பை: அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில், லீலா நடித்துள்ள படம் ‘புஷ்பா 2’. சுகுமார் இயக்கியுள்ளார். தேவிபிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படம் வரும் 5ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்களை வாங்கி வருகிறார்கள். ஆந்திரா, தெலங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது. மேலும் படக்குழுவினர் தங்களது வெளியீட்டு தேதியில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்கள். அதன்படி புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 4ம் தேதி இரவு 9.30 மணிக்கு தெலங்கானாவில் வெளியாகின்றது.

இதனால் டிக்கெட்டின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாகவும், சிங்கிள் ஸ்கிரீன் திரையரங்குகளில் டிக்கெட்டுகளின் விலை 350 ரூபாய் வரை விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் திரையரங்கில் புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் நாளுக்கான டிக்கெட் விலை 3000 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த தியேட்டரில் 3 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படும் அறிவிப்பை ஸ்கிரீன்ஷாட்டாக எடுத்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். இதுவரை எந்த படத்துக்கும் இதுபோல் டிக்கெட் விலை அதிகமாக விற்கப்படவில்லை. மும்பையில் ஷாருக்கானின் ‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்கு கூட இந்த விலை நிர்ணயிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘புஷ்பா 2’ படத்துக்கு ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு காரணமாகவே இந்த விலையை நிர்ணயித்துள்ளதாக திரைப்பட டிரேட் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே சமயம், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.