Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரஜினியின் ‘பாட்ஷா’ ரீ-ரிலீஸ்

சத்யா மூவிஸ் நிறுவனர் ஆர்.எம்.வீரப்பன் தயாரித்து, சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, கடந்த 1995 ஜனவரி 12ம் தேதி திரைக்கு வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம், ‘பாட்ஷா’. இதன் 2ம் பாகம் விரைவில் உருவாகும் என்று அடிக்கடி தகவல்கள் வெளியான நிலையில், ‘பாட்ஷா’வை ரீமேக் செய்வதோ அல்லது அதன் 2ம் பாகத்தை உருவாக்குவது என்பதோ முடியாத காரியம் என்று, ஒரு மேடையில் ரஜினிகாந்த் பேசினார்.

இந்நிலையில், இப்படம் 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும், சத்யா மூவிஸின் 60வது ஆண்டு பொன்விழாவையும் இணைத்து கொண்டாடும் வகையில், அதிநவீன 4கே மேம்பாடுகள் மற்றும் டால்பி அட்மாஸ் சரவுண்ட் ஒலிக்கலவையுடன் கூடிய பிரமாண்டமான தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள ‘பாட்ஷா’ படம் விரைவில் திரைக்கு வருகிறது.

ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ், ஆனந்தராஜ், ஜனகராஜ், விஜயகுமார், யுவராணி, செண்பகம் என்கிற கீதா சிங், சத்யப்பிரியா உள்பட பலர் நடித்துள்ள முழுநீள ஆக்‌ஷனுடன் கூடிய கமர்ஷியல் படமான இது, ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அளித்து, அவரது வாழ்க்கையையும் மாற்றியது. இந்தியா முழுக்க 15 மாதங்கள் வரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிய இப்படம், பிறகு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட இப்படத்தை ஆர்.எம்.வீரப்பன் மகன் தங்கராஜ் வீரப்பன், சத்யா மூவிஸ் சார்பில் வெளியிடுகிறார். ரிலீஸ் தேதி முடிவாகவில்லை. தேவா இசை அமைத்துள்ளார்.