Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ரவி மோகன் சொல்லும் பொய்களால் அவரது தரம் தாழ்ந்து போகிறது: மாமியார் சுஜாதா பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: ரவி மோகன் (ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டார். இந்த பிரிவுக்கு ஆர்த்தியும் அவரது அம்மாவும் பட தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமாரும்தான் காரணம் என ரவி மோகன் தெரிவித்தார். இந்நிலையில் இது பற்றி சுஜாதா விஜயகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 2007 ஆம் ஆண்டு ‘வீராப்பு’ என்ற திரைப்படத்தை முதலில் தயாரித்தேன். திரு சுந்தர் சி அவர்கள் கதாநாயகனாக நடித்த அப்படம் எனக்கு வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த எனக்கு, 2017 ஆம் ஆண்டு என் மாப்பிள்ளை ஜெயம் ரவி நீங்கள் திரைப்படமும் தயாரிக்க வேண்டும் என்ற யோசனையை வழங்கினார். அதனால் மீண்டும் திரைப்படம் தயாரிக்க துவங்கினேன் ஆனாலு உறவு ரீதியாக நெருங்கிய ஒருவரை தொழில் ரீதியாக அணுகும்போது அது குடும்பம் மற்றும் தொழில் இரண்டையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அந்த ஆண்டு தயாரிக்கப்பட்ட அடங்க மறு என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும் வணிக ரீதியாக வெற்றிப்படமாக அமையவில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து திரைப்படங்கள் தயாரிக்க வேண்டும் என்கிற ஆலோசனையை என் மாப்பிள்ளை ஜெயம் ரவி கூறினார். அந்த ஆலோசனையின் பெயரில் தான் நான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்‘அடங்க மறு’, ‘பூமி’ மற்றும் ‘சைரன்’ என மூன்று திரைப்படங்களை தொடர்ந்து என் மாப்பிள்ளை ஜெயம் ரவியை கதாநாயகனாக வைத்து எடுத்தேன். இந்த படங்களுக்காக கிட்டத்தட்ட கோடி ரூபாய்க்கும் மேலாக பைனான்சியர்களிடமிருந்து கடன் வாங்கி இருக்கிறேன். அந்தப் பணத்தில் 25 சதவிகிதத்தை ஜெயம் ரவிக்கு ஊதியமாக வழங்கி உள்ளேன். இதற்கு என்னிடத்தில் அவருடன் செய்து கொண்ட ஒப்பந்தம், அவர் வங்கி கணக்குக்கு செலுத்திய பரிமாற்றம், அவருக்காக நான் செலுத்திய வரி என அனைத்து ஆதாரங்களும் உள்ளது.

இப்போது ஜெயம் ரவி, இந்தப் படங்களின் வெளியீட்டின்போது அவரை நான் பல கோடி ரூபாய் என்னுடைய கடன்களுக்காக பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை. அவரை வெறும் கதாநாயகனாக மட்டுமே நான் பார்த்திருந்தால் கூட அப்படி நிர்பந்தப்படுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி என் சொந்த மகனாகவே கருதினேன். அதனால் அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு பெண் என்ற நிலையையும் கடந்து ஒவ்வொரு படம் வெளியிடும் போதும் விடியற்காலை ஐந்து மணி வரை வாங்கிய கடனுக்காக கிட்டத்தட்ட ஒரு வெள்ளை சுவரை தவிர பைனான்சியர்கள் நீட்டும் எல்லா இடங்களிலும் கையெழுத்து போட்டு பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன்.

இன்று வரை அந்தக் கடன்களுக்கான வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன். சைரன் பட வெளியீட்டின் போது கூட ஜெயம் ரவி நஷ்டத்தை ஈடுகட்ட எனக்கு அடுத்த படம் நடித்துக் கொடுப்பதாகத்தான் கடிதம் கொடுத்தாரே தவிர எங்கேயும் எப்பொழுதும் கடனுக்கு பொறுப்பேற்று தான் கட்டுவதாக யாருக்கும் கையெழுத்து போடவில்லை. மேலும் ஜெயம் ரவி எனக்கு நடித்துக் கொடுப்பதாக சொன்ன அடுத்த படத்திற்கு அவரே ஒரு இயக்குனரை தேர்வு செய்து அவருக்கு முன் பணம் கொடுக்கச் சொன்னார். எந்தவித மறுப்பும் இல்லாமல் அதையும் நாள் செய்தேன் ஒரு வருடமாக நான் பலமுறை முயற்சி செய்தும் எங்களை சந்திப்பதை தவிர்க்கிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி சொன்னது போல் அவரை கோடிக்கணக்கான ரூபாய்க்கு நான் பொறுப்பு ஏற்க வைத்ததற்கான வேண்டாம் ஒரே ஒரு ரூபாய்க்கு அவரை நான் பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை அப்படி ஒன்று இருந்தால் அதை அவர் எங்கு வேண்டுமானாலும் வெளியிட வேண்டும் என இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

நடந்து வருகின்ற பிரச்சனையில் உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அறிக்கைகளில் நீங்கள் சொல்கின்ற பொய்கள் அந்த கதாநாயக பிம்பத்திலிருந்து உங்களை தரம் தாழ்த்தி விடுகிறது என்றும் நீங்கள் ஹீரோவாகவே இருக்க வேண்டும் இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை. இன்று வரை என் பேர குழந்தைகளுக்காக, அந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன் அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது. அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள் அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை. இவ்வாறு சுஜாதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

கோடி ரூபாய்க்கு அல்ல, வெறும் ஒரு ரூபாய்க்காவது நான் பொறுப்பேற்க வைத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை மாப்பிள்ளை ஜெயம் ரவி காட்ட வேண்டும்