Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சிறகன் விமர்சனம்

அடுக்குமாடி குடியிருப்பில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்ணின் வழக்கை போலீசார் விசாரிக்கும்போது, அப்பகுதியில் தன் மகனை தொலைத்துவிட்டு தீவிரமாக தேடி வந்த எம்எல்ஏ ஜீவா ரவியும், அவரது ஜூனியர் அட்வகேட் சானுவும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இப்படி அடுக்கடுக்கான கேரக்டர்களைச் சுற்றி பின்னப்பட்ட முழுநீள சஸ்பென்ஸ் கதையின் முடிவில், கொலை வழக்குகளின் பின்னணி குறித்தும், எதற்காக கொலைகள் நடந்தது மற்றும் கொலையாளி யார் என்பதும் திடுக்கிட வைக்கும் கிளைமாக்ஸ்.

பழிவாங்கியே தீரவேண்டும் என்ற வெறியில் துடிக்கும் கஜராஜ், முதிர்ச்சியான குணச்சித்திர நடிப்பில் மனதில் பதிகிறார். மகளின் நிலையைப் பார்த்து கலங்கும் அவரது சோகத்தை ஆடியன்சுக்கும் கடத்துகிறார். 3 கொலைகள், அநியாயமாக பலியான தங்கை ஹர்ஷிதா ராம் பற்றிய ஞாபகம் என்று இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்கும் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் ஜிடி மற்றும் எம்எல்ஏ ஜீவா ரவி, பள்ளி ஆசிரியை பவுசி ஹிதாயா, மாணவன் பாலாஜி, இன்னொரு ஆசிரியை ஹர்ஷிதா ராம், எம்எல்ஏ உதவியாளர் பூவேந்தன் மற்றும் அனந்த் நாக், மாலிக், சானு ஆகியோர், கதையுடன் இணைந்து பயணித்து கவனத்தை ஈர்க்கின்றனர்.

சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படத்துக்கான கோணங்களில், கதையை வேகமாக நகர்த்த சேட்டை சிக்கந்தரின் கேமரா உதவியிருக்கிறது. ராம் கணேஷ்.கே இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓ.கே ரகம். அடுக்கடுக்கான காட்சிகளும், கேரக்டர்களுக்கான தனி பார்வைகளும் இருந்தாலும், 11 கோணங்களில் எந்த குழப்பமும் இல்லாமல் படத்தை எழுதி எடிட்டிங் செய்து வெங்கடேஷ்வராஜ்.எஸ் இயக்கியுள்ளார். தொடக்க காட்சிகளில் சிறிது குழப்பம் ஏற்படுகிறது. இரண்டு ஆசிரியைகளை மாணவன் தாக்கிய விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?