Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கருப்பு பெட்டி: விமர்சனம்

தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் கே.சி.பிரபாத், தேவிகா வேணு இருவரும் புதுமணத் தம்பதிகள். இரவு நேரத்தில் மட்டும் பிரபாத்துக்கு கனவு வருகிறது. அது எல்லாமே அந்தரங்க கனவுகள். இதுகுறித்து டாக்டரிடம் ஆலோசனை கேட்க, அந்தக் கனவுகளை வரிசையாக டைரியில் எழுதும்படி சொல்கிறார். அதன்படி பிரபாத் எழுதுகிறார். ஒருநாள் இதை தேவிகா வேணு கண்டுபிடிக்கும் நிலையில், எதிர்வீட்டுப் பெண் திடீரன்று இறந்து விடுகிறார். வீட்டுக்கு வந்த வேலைக்காரி ஓடிவிடுகிறாள். கணவரின் நடத்தை மீது சந்தேகப்படும் தேவிகா வேணு, டைரி யைப் படித்து அதிர்ச்சி அடைகிறார். இனி கணவருடன் சேர்ந்து வாழ்வதில்லை என்ற முடிவுக்கு வந்த அவர், பிரபாத்திடம் இருந்து விவாகரத்து கேட்கிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

விமானத்திலுள்ள கருப்பு பெட்டியைப் போல், மனித மனமும் ஒரு கருப்பு பெட்டிதான். அதிலுள்ள தகவல்களைப் பூட்டி வைத்திருப்பது நல்லது. திறந்து பார்த்தால் தேவையில்லாத விபரீதங்கள் ஏற்படும் என்ற கருத்துடன் இப்படத்தை எஸ்.தாஸ் எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் ஹீரோவாகியுள்ளார். கனவு காண்பது, மனைவியின் சந்தேகத்தால் மனம் குமுறுவது என்று தனது நடிப்புக்கு நியாயம் செய்துள்ளார். தேவிகா வேணு குடும்பப்பாங்கான நடிப்பில் கவனிக்க வைக்கிறார். தவிர சரவண சக்தி, ‘சித்தா’ தர்ஷன், அனிதா, கீர்த்தி, நிஷா, சார்மிளா, கண்ணன், ராஜதுரை, சிற்றரசு, காமராஜ், சாய் வைரம் ஆகியோரும் நடித்துள்ளனர்.

காட்சிகளின் இயல்பான நகர்வுக்கு ஆர்.மோசஸ் டேனியல் ஒளிப்பதிவும், அருண் இசையும் அதிக ஒத்துழைப்பு கொடுத்துள்ளன. அமைதியான குடும்ப வாழ்க்கையில் சந்தேகம் ஏற்படுவதால், தம்பதிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்னையை எளியமுறையில் சொன்ன இயக்குனர், தொழில்நுட்ப விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருந்தால், திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்பட்டிருக்கும்.