சென்னை: சிவகார்த்திகேயனின் அமரன் பட டீசரை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கிறார்கள். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதற்கு முன் இவர் ரங்கூன் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். நேற்று சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள். இதையொட்டி டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த கமல்ஹாசன், படத்தின் தலைப்புடன் கூடிய டீசரை நேற்று மாலை வெளியிட்டார். படத்துக்கு அமரன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் சூழ்ந்திருக்க, துப்பாக்கியுடன் தாக்குதலுக்கு தயாராவதுபோல் சிவகார்த்திகேயன் இதன் பர்ஸ்ட் லுக்கில் காட்சி தருகிறார். டீசரில், காஷ்மீரில் ராணுவ பின்னணியில் கதை நடக்கிறது. பிரிவினைவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான மோதலை மையமாக வைத்து கதை சொல்லப்படுவதாக தெரிகிறது. படம் முழுக்க சீரியஸான கேரக்டரில் சிவகார்த்திகேயன், ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார்.