விமர்சனம்
வனப்பகுதி கிராமத்தில் வசிக்கும் விஜய் பிரசாத், தேன் சேகரித்து விற்று பிழைப்பு நடத்துகிறார். அவரது மனைவி காயத்ரி ரெமாவுக்கு குழந்தை பிறக்காததால், அதைச்சொல்லி ஊர் மக்கள் அவமானப்படுத்துகின்றனர். ஒருநாள் தேன் சேகரிக்க காட்டுக்குச் செல்லும் விஜய் பிரசாத், அங்கு ஆதரவற்ற நிலையில் இருக்கும் பச்சிளம் குழந்தையை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்க்கிறார். இந்நிலையில், காட்டு விலங்குகளை வேட்டையாடி வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்கும் வில்லன் கோஷ்டியின் குற்றச்செயல்களை விஜய் பிரசாத் வன்மையாக கண்டிக்கிறார். இதில் உஷாரான வில்லன் கோஷ்டி, தங்களின் தவறுகளை மறைக்க விஜய் பிரசாத் மீது வீண்பழி சுமத்துகின்றனர். அதை ஊர் மக்கள் நம்புகின்றனர். அப்போது சபரிமலை அய்யப்பனை தரிசிக்க விரதம் இருந்து மாலை அணியும் ஊர் மக்கள், விஜய் பிரசாத்தை ஒதுக்கி வைக்கின்றனர். அப்போது காட்டில் சிலர் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அவர்களை புலி கொன்றதாக நம்பும் வனத்துறையினர், ஊருக்குள் புலி நடமாட்டம் இருப்பதாகச் சொல்லி, பக்தர்கள் சபரிமலை பயணம் செல்ல தடை விதிக்கின்றனர்.
பிறகு என்ன நடக்கிறது என்பது, மெய்சிலிர்க்க வைக்கும் கிளைமாக்ஸ். ஆன்மிகத்துடன் சோஷியல் மெசேஜை கலந்து கமர்ஷியல் பேண்டஸி படமாக உருவாக்கிய இயக்குனர் அய்யப்பனுக்கு பாராட்டுகள். தேன் சேகரிக்கும் துடிப்பான இளைஞன், மனைவியை நேசிக்கும் கணவன், மகனுக்கு பாசமுள்ள தந்தை, வில்லனுக்கு சிம்ம சொப்பனம் என்று, பன்முக நடிப்பில் விஜய் பிரசாத் மிளிர்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக அடித்துள்ளார். அழுத்தமான கேரக்டரை உணர்ந்து காயத்ரி ரெமா திறம்பட நடித்துள்ளார். வங்கியில் லோன் வாங்கி வீடு கட்டி, அது ஜப்தி செய்யப்படும் நிலையில் கலங்கும் சார்லியின் குணச்சித்திர நடிப்பு உருக்கம். கஞ்சா கருப்புவால் காமெடி செய்ய முடியாத நிலையில், ராமர் ஓரளவு காப்பாற்றுகிறார். வனம், ஊர், அருவி, இரவு, பகல் என்று, ராஜீவ் ராஜேந்திரனின் கேமரா விளையாடி இருக்கிறது. அரவிந்த் பாபுவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றால், பின்னணி இசை மசாலா ரகம். குழந்தையின்மை பிரச்னையில் தொடங்கி, சமூக விழிப்புணர்வுக்கான பாதையில் படம் முடிகிறது. சின்ன பட்ஜெட்டில் நிறைவான படம் கொடுத்திருப்பதால், சில குறைகளை விட்டுவிடலாம்.