ஸ்டொன் பென்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ். ஜே. சூர்யா, நிமிஷா சஜயன், நவீன் சந்திரா, சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த தீபாவளி சிறப்பாக வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் X.
ஒரு அசம்பாவிதத்தால் கைதியாக இருக்கும் கிருபாகரனுக்கு ( எஸ் ஜே சூர்யா) போலீஸ் தரப்பில் இருந்து மதுரையில் இருக்கும் அல்லியாஸ் சீசர் என்னும் கேங்ஸ்டரை முடிக்குமாறு பொறுப்பு கொடுக்கப்படுகிறது. அப்படிச் செய்தால் அவருடைய தண்டனை காலம் ரத்து செய்யப்பட்டு உடனடியாகவே விடுதலை என்னும் சலுகையுடன் வர அந்த பொறுப்பையும் கிருபாகரன் ஏற்றுக்கொள்கிறார்.
அதற்காகத் தன்னை தானே இயக்குநர் எனச் சொல்லிக்கொண்டு அல்லியாஸ் சீசரிடம் நெருங்கும் கிருபாகரன் தொடர்ந்து தனக்கு கொடுத்த டாஸ்கை முடித்தாரா? இல்லையா? தொடர்ந்து கதை என்னவாக நகர்கிறது? முடிவு என்ன? என்பது மீதிக் கதை.
இதுவரையிலும் இல்லாத அளவிற்கு ராகவா லாரன்ஸ், லாரன்ஸ் என்பதேத் தெரியாத அளவிற்கு தனது அற்புதமான நடிப்பை காட்டி ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். மாஸ்டர் வாழ்க்கையில் இது மாஸ்டர் பீஸ் என்று சொல்லலாம். எஸ் ஜே சூர்யா… அவர் நடிப்பை என்னவென்று சொல்வது இதைவிடவும் அதிரவைக்கும் நடிப்பு திறமையைக் காட்டி நம்மையெல்லாம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர். இந்த இயக்குநர் கதாபாத்திரம் அவருடைய வாழ்க்கையின் கேரக்டரே அதுதான் என்பதால் அவ்வளவு அசால்ட் ஆகவும் நேர்த்தியாகவும் கையாண்டு நடித்திருக்கிறார்.
நடிப்பு ராட்சசி நிமிஷா சஜயன் ஒரு மலைவாழ் பெண் எப்படி உடை அணிந்திருப்பார் எப்படி பேசுவார் என அத்தனையையும் உள்வாங்கி அப்படியே கண் முன் நமக்கு கொடுத்திருக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் கூட அவரவர் கேரக்டரை நன்கு உணர்ந்து தங்களது திறமையை காட்டி இருக்கிறார்கள்.
ஜிகர்தண்டா… என்றாலே முதல் பாதியில் ஒரு கதை இரண்டாம் பாதையில் வேறு விதமான ஒரு கதை என்பதை சரியாக விஷுவல் விருந்தாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் முதல் பாதி வேறு ஒரு களத்திலும் இரண்டாம் பாதியில் வேறு ஒரு களத்திலும் பயணித்து இரண்டாம் பாதி முழுக்க நம்மை ஒரு கானகத்திற்குள் கடத்தி இருக்கிறார். கிடைத்த பட்ஜெட்டையும் வாய்ப்பையும் மிக அற்புதமாக கார்த்திக் சுப்புராஜ் பயன்படுத்தி இருக்கிறார்.
திரு ஒளிப்பதிவில் யானைகளும் , பச்சை பசேல் காடுகளும் மலைகளும் ஆக நமக்கு விருந்து படைத்திருக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் காட்சிகள் இன்னும் வலிமையாகவும் வளமாகவும் தெரிகின்றன. அதிலும் படத்தின் இறுதி காட்சியில் வரும் இசை நம்மை புல்லரிக்கச் செய்கிறது.
ஜிகர்தண்டா என்றாலே அசால்ட் சேதுவும் உடன் தேசிய விருதும் நம் மனதிற்கு ஞாபகம் வந்துவிடும். அந்த பென்ச் மார்க்கை இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பூர்த்தி செய்திருக்கிறதா என்றால் ஒரு சில இடங்களில் பூர்த்தி செய்து இருந்தாலும் ஒரு சில இடங்களில் இன்னும் சற்று மெனக்கட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
முக்கியமாக ஜிகர்தண்டா முதல் படத்தின் சிறப்பே அசால்ட் சேது என்றால் ஆடியன்ஸ்கே கொடுக்கப்பட்ட பயம் தான். இடைவேளை காட்சியில் படத்தின் சித்தார்த் கருணாகரன் மட்டுமல்லாமல் பார்க்கும் பார்வையாளனுக்கும் கூட அந்த பயம் தொற்றிக் கொள்ளும். அதை இந்த ஜிகர்தண்டா கொடுக்க தவறி இருக்கிறது. ஒரு சில வருடங்களும் அதற்கான டெக்னிக்கல் வார்த்தைகளும் கூட லாஜிக்கில் சற்றே இடையூறு செய்கின்றன. மேலும் படத்தின் முதல் பாதி கூட அதிக நீளமான காட்சிகளாக தெரிகின்றன.
மொத்தத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஒரு சினிமா நினைத்தால் வரலாறையே மாற்றி எழுத முடியும் என்னும் கருத்தை மிக ஆழமான சம்பவங்களால் செதுக்கி இந்த தீபாவளியில் தவிர்க்க முடியாத படமாக மாறி இருக்கிறது.