கடந்த 2021 ஆம் ஆண்டு காட்ஸில்லா vs காங் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கிறது காட்ஸில்லா எக்ஸ் காங் – தி நியூ எம்பயர். ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் ரெபேக்கா ஹால், பிரையன் டைரி மற்றும் ஹென்றி ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகி இருக்கிறது. காட்ஸில்லாவுடன் இணைந்து நகரத்தைக் காப்பாற்றிய பின் காங் ஹாலோ பூமியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி அங்கே அமைதியாக வாழ்ந்து வருகிறது. இந்நிலையில் இங்கே பூமியில் இட்வா பழங்குடியைச் சேர்ந்த கடைசி மனிதியாக ஜியா (கெய்லீ ஹாட்ல்) டாக்டர் இலென் ஆன்ட்ரூஸிடம்(ரெபேக்கா ஹால்) வளர்கிறார்.
இன்னொரு புறம் அமைதியாக பூமியில் சுற்றித் திரியும் காட்ஸில்லா. இதற்கிடையில் ஹாலோ பூமியில் அதிர்வலைகள் தெரியத் துவங்குகின்றன. இதனால் குழப்பத்திற்கு ஆளாகும் காட்ஸில்லா ஆர்க்டிக் நோக்கி பயணிக்கிறது. இங்கே காங் இருக்கும் இடத்திலும் சில பிரச்னைகள் வர அனைவரும் அதிர்வலைகள் வரும் திசை நோக்கி பயணிக்கிறார்கள். அது என்ன அதிர்வலை, இதனால் பிரச்னை உண்டா என பல கேள்விகளுக்கு பதில் வைக்கிறது க்ளைமாக்ஸ். முதல் பாகத்தை இயக்கிய ஆடம் விங்கார்ட் இந்தப் பாகத்தையும் இயக்கியிருக்கிறார்.
மனிதர் இந்தியப் படங்களால் அதிகம் ஈர்க்கப்பட்டிருப்பார் போல பட்ம முழுக்க இந்திய , ஆசிய பார்வையாளர்களைக் கவரக் கூடிய பல சுவாரஸ்யங்கள் உள்ளன. கதையின் உருவாக்கமும் இந்திய படங்கள் சாயலில் இரு நண்பர்கள் சேர்ந்து வரும் ஆபத்தை காப்பது, அடிமைகளை விடுதலையாக்கும் தலைவன் என எங்கும் ஹீரோயிசம் மயம். படம் முழுக்க குழந்தைகளைக் கவரக் கூடிய பல சுவாரஸ்ய மாஸ் மொமெண்ட்களையும் அடுக்கியுள்ளன.
கிராபிக்ஸ் மற்றும் மேக்கிங்கும் அருமை. பிரையன் டையர் ஹென்றியின் குட்டிக் குட்டி காமெடிகள், டான்ஸ் ஸ்டீவன்ஸின் ஸ்டைலிஷ் உதவிகள் என சில பளிச் மொமெண்ட்களும் ரசனை உண்டாக்குகின்றன. ரெபேக்கா மற்றும் கெய்லீயின் அம்மா –மகள் எமோஷனும் மிகச் சிறப்பாகவே வேலை செய்கிறது. என்ன காங் வில்லன் கூட ஏதோ புல்லட் பெல்ட்களை அணிந்த கமாண்டோ பாணியில் எலும்புக் கூடுடன் வருவது சினிமா கிளீஷே ரகம். மொத்தத்தில் எங்கும் படம் நீளம் என்னும் உணர்வு உண்டாக்கவில்லை. முகம் சுளிக்கும் காட்சிகள் கூட இல்லை. கோடை விடுமுறைக்கு ஏற்ற விருந்தாக குடும்பப் படமாகவே ‘காட்ஸில்லா எக்ஸ் காங் : தி நியூ எம்பயர் படம் மனதில் இடம் பிடிக்கிறது.