கல்லூரி வளாகத்தில் போதை, வன்முறை, அடிதடி, ரத்தம், பாலியல் கலந்து ஒரு கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் பிஜாய் நம்பியார். கதையின் நாயகர்களான அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் இருவரும் பள்ளியில் படிக்கும்போதே தீராத பகை உணர்ச்சி ெகாண்டவர்கள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் ஒரே கல்லூரியில் இணைந்து படிக்கும் சூழ்நிலை அமைகிறது. தனது பழைய பகையை உடனே தீர்த்துக்கொள்ள
காளிதாஸ் ஜெயராம் முயற்சிக்கிறார். அர்ஜூன் தாசுக்கு கல்லூரியில் இருக்கும் செல்வாக்கு, அவரது காதல் மற்றும் நண்பர்களைப் பயன்படுத்தி, தினமும் அவரை டார்ச்சர் செய்கிறார். இறுதியில் மிகப்பெரிய போராக மாறி வன்முறை வெடிக்கிறது. பிறகு இருவரும் பகையை தீர்த்துக்கொண்டார்களா? நண்பர்களின் கதி என்ன என்பது மீதி கதை. முழு கதையும் கல்லூரிக்குள் நடந்தாலும், ஒரு காட்சியில் கூட யாரும் புத்தகத்தை எடுத்துப் படிக்கவில்லை. எல்லா நேரமும் கையில் மது பாட்டில், வாயில் சிகரெட் அல்லது ஆயுதத்துடன் நடமாடுகின்றனர். சின்ன விஷயம் என்றாலும், அதற்காக கடுமையாக ேமாதுகின்றனர். இதற்கிடையே கல்லூரி நிர்வாகமும் இருதரப்பு மாணவர்களுடன் மோதுகிறது.
நிர்வாகத்துக்கு இடையூறாக இருப்பவர்களை வன்முறையால் விரட்டி அடிக்கிறது. இப்படி படம் முழுக்க வன்முறை நிறைந்து இருக்கிறது. அர்ஜூன் தாஸ், டி.ஜெ.பானு ஜோடி மற்றும் காளிதாஸ், சஞ்சனா நடராஜன் ஜோடியின் காதல் மட்டுமே மென்மையாக கையாளப்பட்டுள்ளது. இந்த ஜோடிகளின் திடீர் மோதலும், பிறகான கூடலும், வசனங்களும் கவிதையாகப் படமாகியுள்ளன.
அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் மோதலுக்கான காரணம் வலுவாக இல்லை. ஜிம்ஸி காலித், பிரெஸ்லி ஆஸ்கர் டிசோசா ஆகியோரின் ஒளிப்பதிவு பலம். நல்ல காட்சி அனுபவம் கிடைக்கிறது. ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கர நாராயணன், கவுரவ் கோட்கின்டி ஆகியோரின் பின்னணி இசை சிறப்பு. காதல், மோதல், காமம், வன்முறை கலந்த வழக்கமான கல்லூரி கதையை ஹைடெக் தரத்தில் கொடுத்திருந்தாலும், ‘கல்லூரி என்றாலே இப்படித்தான் இருக்குமா?’ என்று பெற்றோர் மனதைப் பதறவைப்பதாகவும் படம் இருக்கிறது.