சென்னை: ரஜினிகாந்த், அவ்வப்போது இமயமலை சென்று பாபாஜி குகையில் தியானம் செய்வது வழக்கம். அது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகும். அந்த குகையில் நடிகை ஆத்மிகா தியானம் செய்த புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகி வருகின்றன. ஹிப்ஹாப் ஆதி நடித்த ‘மீசையை முறுக்கு’ படத்தில் நாயகியாக நடித்தவர் ஆத்மிகா. ‘கோடியில் ஒருவன்’, ‘காட்டேரி’, ‘கண்ணை நம்பாதே’, ‘திருவின் குரல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்குச் சென்று தியானம் செய்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் பயணம் ஆன்மாவின் அழைப்பு. பாபாஜி குகைக்குச் செல்ல தெய்வீக அழைப்பு வந்தது. சிறிதும் யோசிக்காமல் சென்றேன். இது கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. ஆனால், நல்ல விஷயங்கள் எளிதில் கிடைத்துவிடாது. பாபாஜி குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்காரும்போது அது ஆழமாக என்னைத் தொட்டது. என் வாழ்நாளில் இதற்கு முன் இதுபோன்ற தெய்வீக அனுபவத்தை அனுபவித்ததில்லை. இதற்குப் பிறகு வாழ்க்கை குறித்த முழு பார்வையும் மாறிவிட்டது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இதை அனுபவிக்கத் தகுதியானவர்கள். இவ்வாறு ஆத்மிகா கூறியுள்ளார்.