சென்னை: வேதா பிக்சர்ஸ் சார்பில் எஸ்.தியாகராஜா தயாரித்துள்ள படம், ‘பம்பர்’. இதை எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். வெற்றி, ஷிவானி நாராயணன் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார். வரும் ஜூலை 7ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனரும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவருமான கே.பாக்யராஜ் பேசுகையில், ‘ஒரு படத்தில் பணியாற்றும் அனைவருக்கும் அவரவர் பணி சார்ந்த உரிமை இருக்கிறது. ஆனால், எழுத்தாளர்களுக்கு மட்டும் உரிமை இல்லாமல் இருக்கிறது. இதற்கு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று ைடட்டிலில் பெயர் போட்டுக்கொண்ட நானும் ஒரு காரணம். இந்த நிலை மாற வேண்டும்’ என்றார். வெற்றி பேசும்போது, ‘நான் திரில்லர் படத்தில் மட்டுமே நடிக்கிறேன் என்ற விமர்சனம் இருக்கிறது. அதை இப்படம் மாற்றும். இதுவரை நான் நடித்த படங்களில் இருந்து இப்படம் மிகவும் வித்தியாசமான கதையும், காட்சிகளும் கொண்டதாக இருக்கும்’ என்றார்.
106