சென்னை: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் குபேரா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு படத்தின் முதல் தோற்றத்தையும், டைட்டிலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ‘குபேரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கிழிந்த சட்டை, அழுக்கடைந்த தோற்றத்தில் மீசையும், தாடியுமாக பரிதாபத்துடன் யாசகர் போல் நின்றுகொண்டிருக்கிறார் தனுஷ். அவருக்கு பின்புறம் சிவன், பார்வதியின் படங்கள் உள்ளன. ‘குபேரா’ என டைட்டிலுக்கு எதிர்மாறான தோற்றம் படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என நெட்டிசன்கள் கூறுகின்றனர். பர்ஸ்ட் லுக் தொடர்பான வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.