சென்னை: தன்னுடைய 51வது படத்திற்காக, இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், தெலுங்கு திரையுலகின் மிகவும் திறமையான மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. தனுஷ் மற்றும் சேகர் கம்முலாவின் கூட்டணியில் அதிரடியாக உருவாகும் இந்த டி51 படத்தை, சுனில் நாரங் மற்றும் புஸ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோரின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமா மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் சார்பில் பல மொழிகளில், தயாரிக்க உள்ளனர்.
டி51 தயாரிப்பாளர்கள் இந்த படத்திற்கான கான்செப்ட் போஸ்டர் ஒன்றை தனுஷின் பிறந்தநாளான நேற்று வெளியிட்டனர். இந்த படத்தில் இதுவரை பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படத்திற்காக மிகப்பொருத்தமான கதையை இயக்குனர் சேகர் கம்முலா தயார் செய்துள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக ராஷ்மிகா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.