ஐதராபாத்: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடந்தது. தற்போது இப்படத்துக்கு DNS என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, ஆங்கிலத்தில் தனுஷ், நாகார்ஜூனா, சேகர் கம்முலா ஆகியோர் பெயர்களை எழுதினால் வரும் முதல் எழுத்துகளையே DNS என்று குறிப்பிடுகின்றனர். இதையடுத்து ராஷ்மிகா மந்தனாவின் தீவிர ரசிகர்கள், ‘அதென்ன DNS என்ற தலைப்பு? எங்கள் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவை டைட்டிலில் விட்டுவிட்டீர்களே. இது நியாயமா? படத்துக்கு தற்காலிக தலைப்பாக DRNS என்று வைத்திருக்கலாம் அல்லவா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அனைத்து மொழிப் படங்களிலும் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள ராஷ்மிகா மந்தனா, தற்போது கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக உயர்ந்துள்ளார். அவர் தனுஷுடன் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.
இந்நிலையில் தனுஷ் பற்றி ராஷ்மிகா மந்தனா கூறியதாவது: டைரக்டர் சேகர் கம்முலா என்னிடம் இப்படத்தின் கதையைப் பற்றி சொன்னவுடன், இப்படத்தில் நான் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அடுத்த மாதம் முதல் படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டு நடிப்பேன். எப்போதுமே தனது படங்களில் மிகச்சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பவர், தனுஷ். அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன். இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனுஷுடன் இணைந்து நடிப்பதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு, இனிமேல் என்னை நடிப்பில் மேம்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.