கோவை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ள படம் ‘லியோ’. சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கவுதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு. சமீபத்தில்தான் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது. ஆயுதபூஜை விடுமுறையில் அக்டோபர் 19ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மாணவர்கள் மத்தியில் பேசினார் லோகேஷ் கனகராஜ். அவர் பேசியது: ‘லியோ’ படம் எல்யூசி படமா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. 3 மாதங்கள் காத்திருங்கள். ரஜினி நடிப்பில் படம் இயக்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படும். சூர்யா நடிப்பில் ‘இரும்புகை மாயாவி’ படம் எனது லட்சியப் படம். அதற்கு காலம் தேவை. எனக்கு பெரிதாக ஆசை இல்லை. பத்து படங்கள் வரை இயக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். பத்தாவது படம் முடிந்தவுடன் சினிமாவிலிருந்து விலகி விடுவேன். நம் மனதுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்வது தான் வாழ்க்கை.
சினிமாவில் இருக்கும் வரை, ரசிகர்கள் கொடுக்கும், டிக்கெட் பணம் 150 ரூபாய்க்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதற்காகத்தான் பணிபுரிகிறேன். அதுதான் நியாயமும் கூட. நான் இல்லாத இடத்தை வேறு ஒருவர் நிரப்புவார். விரைவில் ஒரு படம் இயக்க உள்ளேன். அதன்பின், கைதி 2 படம் கட்டாயம் இயக்குவேன். அஜித் உள்பட அனைவருடன் பணிபுரிய ஆசைப்படுகிறேன். ஒரு படம் பலரது உழைப்பில் உருவாகிறது. அதை நினைத்து பைரசி வராமல் தடுப்பது ரசிகர்கள் கையில் இருக்கிறது. லியோ படத்தில் அரசியல் வசனங்கள், காட்சிகள் எதுவும் கிடையாது. எனக்கு போதிய அரசியல் அறிவு கிடையாது. தெரியாத விஷயத்தை செய்தால் அது தவறாகிவிடும். அதனால் அரசியல் படங்களை இயக்க மாட்டேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் பேசினார்.