பெங்களூரு: நாடகக்கலையை அழியாமல் பாதுகாக்கவும், திறமை வாய்ந்த புதிய நாடகக்கலைஞர்களை உருவாக்கவும் ‘நிர்தி கந்தா’ என்ற நாடக மையத்தை பிரகாஷ்ராஜ் தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஆரம்பகாலத்தில் எனக்கு மேடை நாடகங்கள்தன் வாழ்க்கை கொடுத்தது. அதுவே, என்னை சினிமாவுக்கு அழைத்து வரவும் உதவியது. அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக, நாடகக்கலைக்கு தனி மேடை ஒன்றை உருவாக்க முடிவு செய்தேன். இதற்காக கர்நாடகா மாநிலத்தில் ரங்கப்பட்டினத்தில் இருந்து 10 கி.மீ தூரத்தில் இருக்கும் லோக் பவானி நதிக்கரையில், இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அமைதியான இடத்தை தேர்வு செய்து, 5 ஏக்கர் பரப்பளவில் நாடக மையத்தை உருவாக்கியுள்ளேன். இங்கு தினமும் நடிகர்கள், இயக்குனர்கள், எழுத்தாளர்கள் வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் நடிப்பு கற்றுக்கொள்கின்றனர். பெரிய திரை, சின்னத்திரை, நாடகம் போன்ற எந்த துறைக்கும் இங்கு வந்து நடிகர்களை தேர்வு செய்ய முடியும். புதிய முயற்சியாகவே இதை நான் தொடங்கியுள்ளேன். இந்த நாடக மையத்தின் மூலம் 20 புதிய நாடகங்களை இன்னும் சில வருடங்களில் ரசிகர்களுக்கு எங்களால் வழங்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.
247