சென்னை: தமிழில் திரைக்கு வந்த ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ ஆகிய படங்களை இயக்கியவர், லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் அவர் ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் ‘உறியடி’ விஜயகுமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ என்ற படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பெயரில் போலியான பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி, அதில் சிலர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த லோகேஷ் கனகராஜ், தனது சமூக வலைத்தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘நான் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு வைத்துள்ளேன். வேறெந்த சமூக ஊடகத்திலும் எனக்கு கணக்கு இல்லை. தயவுசெய்து என் பெயரிலான மற்ற போலி கணக்குகளை புறக்கணிக்கவும். அதை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.