சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இதனால், இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனிருத் இசையில் உருவான ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், கடந்த ஜூலை 6ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், தமன்னா இணைந்து நடித்த இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், 2வது பாடலான ‘ஹுக்கும்… டைகர் கா ஹுக்கும்’ என்ற பாடல், கடந்த ஜூலை 17ம் தேதி வெளியானது. இப்பாடலும் இணையதளத்தில் டிரெண்டானது. இரு பாடல்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ‘ஹுக்கும்’ பாடலுக்கு முன்பாக அப்பாடலுக்கான முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. ‘காவாலா’, ‘ஹுக்கும்’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று டிரென்டிங் ஹிட்டடித்த நிலையில், ரஜினிகாந்தின் பாப்புலரான பன்ச் வசனங்களில் ஒன்றான ‘ஜூஜூபி’ என்று தொடங்கும் 3வது பாடல் கடந்த ஜூலை 26ம் தேதி இணையதளத்தில் வெளியானது. இப்பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இதையடுத்து ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி நடந்தது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் கடந்த 2ம் தேதி மாலை வெளியானது. இதில் ரஜினிகாந்தின் மாஸான வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து டிரைலரை பல்வேறு சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். இப்போது படத்தின் 4வது பாடலான ‘ரத்தமாரே’ என்ற பாடல் கடந்த 5ம் தேதி வெளியாகி வைரலானது. இந்நிலையில் முதல் பாடலாக வெளியான ‘காவாலா’ பாடல் 107 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது குறைந்த நாட்களில் 100 மில்லியன்களை தொட்ட முதல் பாடலாக இது சாதித்திருக்கிறது. ‘ஜெயிலர்’ பட டிரைலரும் ‘காவாலா’ பாடலும் படத்துக்கான எதிர்பார்ப்புகளை பலமடங்கு உயர்த்தியுள்ளது.