சென்னை: பிரபா பிரேம்குமார் தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வந்த படம், ‘அடியே’. இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுரி கிஷன், வெங்கட் பிரபு நடித்திருந்தனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருந்தார். இப்படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் கவுரி கிஷன் நெகிழ்ச்சியுடன் பேசியதாவது: இப்படத்தில் செந்தாழினி என்ற என் வயதுக்கு மீறிய கேரக்டரில் நடித்தேன். இந்த கேரக்டருக்காக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் என்னிடம் பேசியபோது, எனக்கு எந்த சந்தேகமும் ஏற்படவில்லை. இது ஒரு சவாலான கேரக்டர் என்று நம்பினேன். ‘96’ படத்தில் நான் நடித்திருந்த ஜானு என்ற கேரக்டருக்குப் பின்பு, அதைவிட அழுத்தமான செந்தாழினி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். செந்தாழினி, என் மனதுக்கு மிக நெருக்கமானவள். எனக்கு மிகவும் பிடித்தவள்.
சில படங்களில் இருவேடங்களில் நடித்திருப்போம். இப்படத்தில் எனக்கு பல வெர்ஷன்ஸ் இருந்தது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது சவாலாக இருந்தது. கதையோட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலர், ‘ஜானுவை செந்தாழினி மறக்கடித்து விட்டாள்’ என்று பாராட்டினர். இது எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. இப்படத்தை தயாரித்த மாலி அண்டு மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அடுத்து நான் நடிக்கும் படம், ‘போட்’. சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதை நாயகனாக நடிக்கிறார். தவிர, ‘அடியே’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்கிறேன். ‘அடியே’ படத்தில் அர்ஜூன், ஜீவா என்ற இருவிதமாக கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் குமார் நன்றாக நடித்திருந்தார். படப்பிடிப்புக்குப் பிறகும் கூட நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.