சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் 2வது பாடல் நாளை (17ம் தேதி)மாலை வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன், சுனில் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் டி.வி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’ ஆகிய படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் 4வது முறையாக ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
இதனால், இப்படத்துக்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அனிருத் இசையில் உருவான ‘வா நூ காவாலய்யா’ என்று தொடங்கும் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல், கடந்த 6ம் தேதி வெளியானது. ரஜினிகாந்த், தமன்னா இணைந்து நடித்த இப்பாடல் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், 2வது பாடலான ‘ஹுக்கும்… டைகர் கா ஹுக்கும்’ என்ற பாடல், நாளை 17ம் தேதி வெளியாகிறது. இதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடலை ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.