சென்னை: ‘ஜெய் பீம்’, ‘குட்நைட்’ உள்பட பல படங்களில் நடித்தவர் மணிகண்டன். அவர் அடுத்து ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘நக்கலைட்ஸ்’ ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். சினிமாகாரன் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் கதையை, பிரசன்னா பாலச்சந்திரனும் ராஜேஷ்வர் காளிசாமியும் எழுதியுள்ளனர். திரைக்கதை, வசனத்தைப் பிரசன்னா பாலச்சந்திரன் எழுதியுள்ளார். சுஜித் சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு வைஷாக் இசை அமைக்கிறார். சான்வி மேக்னா நாயகியாக நடிக்கிறார். இவர் தெலுங்கில் ‘பிரேம விமானம்’, ‘பித்தா கத்தலு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தர்ராஜன் உட்பட பலர் நடிக்கின்றனர். குடும்ப காமெடி கதையில் மணிகண்டன் படம் பற்றி ராஜேஷ்வர் காளிசாமி கூறும்போது, ‘இந்தக் கதையை சில வருடங்களுக்கு முன்பே உருவாக்கிவிட்டோம். இதில் மணிகண்டன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவரிடம் சொன்னோம். அவருக்கும் பிடித்திருந்தது. இப்போது படப்பிடிப்பைத் தொடங்குகிறோம். ஒரு மிடில் கிளாஸ் இளைஞன் தினமும் குடும்பத்தை நடத்துவதே அட்வெஞ்சர் போல இருக்கிறது. இதுதான் ஒன்லைன். குடும்பப் பின்னணியில் உருவாகும் காமெடி கதை. முழுக்க கோவையில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.