சென்னை: மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் படம், ‘மார்கழி திங்கள்’. இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. புதுமுகங்கள் ஷ்யாம் செல்வன், ரக்ஷணா, நக்ஷா சரண் ஆகியோருடன் தாத்தா கேரக்டரில் பாரதிராஜா, வில்லனாக சுசீந்திரன் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.
பள்ளிப் பருவத்து காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து மனோஜ் பாரதிராஜா கூறுகையில், ‘நான் பாரதிராஜாவின் மகன் என்றாலும், இயக்குனர்களில் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் மணிரத்னம். ஆனால், என் முதல் படத்தில் யாருடைய பாணியையும் நான் பின்பற்றவில்லை. இன்றைய இளைய சமுதாயத்துக்கு என்ன தேவையோ அதை இப்படத்தில் கொடுத்திருக்கிறேன். ஒரு நடிகனாக என்னை ஏற்றுக்கொண்ட நம் ரசிகர்கள், ஒரு இயக்குனராகவும் என்னை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன். வரும் அக்டோபர் 5ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இனி படம் இயக்கிக்கொண்டே நடிப்பேன்’ என்றார்.