சென்னை: சென்னை விமான நிலையத்தில் நேற்று காலை பெங்களூரு வழியாக விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். ரஜினிகாந்த் ஒவ்வொரு ஆண்டும் இமயமலைக்கு சென்று, அங்கிருந்து ரிஷிகேஷ் யாத்திரை செல்வது வழக்கம். மேலும், தனது புதிய திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் ரஜினி இமயமலை யாத்திரையை மேற்கொள்வார். கடந்த 4 ஆண்டுகளாக கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு, உடல்நலக் குறைவு காரணமாக தனது இமயமலை பயணத்தை ரஜினி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று (10ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக, கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தனது இமயமலை பயணத்தைரஜினிகாந்த் மேற்கொண்டுள்ளார். இதற்காக அவர் நேற்று காலை 9 மணியளவில் சென்னை விமானநிலையத்தில் உள்நாட்டு விமான முனையத்துக்கு காரில் வந்திறங்கினார். பின்னர் இங்கிருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலமாக பெங்களூருக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் அங்கிருந்து இமயமலைக்கு ரஜினி யாத்திரை மேற்கொள்கிறார் என கூறப்படுகிறது. முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரஜினிகாந்த் பேசும்போது, ‘நான் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை (இன்று) தியேட்டர்களில் ரிலீஸாகிறது. அப்படத்தை பார்த்துவிட்டு, உங்களின் கருத்துகளை கூறுங்கள்’ என்றார். நிருபர்களின் பிற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் விமான நிலையத்துக்குள் சென்றுவிட்டார்.
60