விஜய் ஆண்டனி நடிப்பில் வரும் அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வரும் படம், ‘ரத்தம்’. தெலுங்கில் ‘தோஷி’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ‘தமிழ்ப்படம்’, ‘தமிழ்ப்படம் 2.0’ ஆகிய படங்களின் இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கியுள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அரசியல் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில், ஒரு கொலையும், அதற்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய புள்ளிகளின் சதியை பற்றியும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.
பத்திரிகை ஆசிரியர் வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். பத்திரிகையாளராக நந்திதா ஸ்வேதா, விஜய் ஆண்டனியின் மனைவியாக மகிமா நம்பியார், முக்கிய கேரக்டரில் ரம்யா நம்பீசன் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ‘வன்மம்’ என்று தலைப்பு சூட்ட தீர்மானித்த படக்குழுவினர், பிறகு ‘ரத்தம்’ என்று மாற்றிவிட்டனர். சி.எஸ்.அமுதனும், விஜய் ஆண்டனியும் கல்லூரியில் இணைந்து படித்த நெருங்கிய நண்பர்கள்.