பாலிவுட் முன்னணி நடிகை கிரித்தி சனோனின் சகோதரி, நுபுர் சனோன். பாடகியான அவர், ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தில் நடித்துள்ளார். அபிஷேக் அகர்வால் தயாரித்துள்ள இப்படத்தில் அனுபம் கெர், ரேணு தேசாய், முரளி சர்மா, ஹரீஷ் பெராடி, ஆடுகளம் நரேன் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரைக்கு வரும் இப்படத்தில் நடித்தது குறித்து நுபுர் சனோன் கூறுகையில், ‘ரவிதேஜாவுடன் இணைந்து நடித்ததை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக நினைத்து பெருமைப்படுகிறேன்.
அவர் ஒரு தனித்துவம் வாய்ந்த நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பு என்று வந்துவிட்டால் பரபரப்பாகி விடுவார். அக்ஷய் குமாருடன் ஒரு ஆல்பத்தில் நடித்தபோது, அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறீர்கள் என்று கேட்டார். தெலுங்கில் ரவிதேஜாவுடன் நடிப்பதாகச் சொன்னேன். ‘ரவிதேஜா படம்தானே. கண்களை மூடிக்கொண்டு ஒப்புக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உங்களுக்கு தெரியாது’ என்றார். அவர் சொன்னதை படப்பிடிப்பில் உணர்ந்தேன். முதல் பட நடிகை என்று பார்க்காமல், என்னை ரவிதேஜா நன்கு கவனித்துக்கொண்டார்’ என்றார்.