சென்னை: கடந்த 1987ல் வெளியான படம், ‘நாயகன்’. இதில் வேலு நாயக்கர் வேடத்தில் கமல்ஹாசன் நடித்தார். முக்கிய கேரக்டர்களில் சரண்யா, கார்த்திகா, நிழல்கள் ரவி, ஜனகராஜ், நாசர், டெல்லி கணேஷ், விஜயன், டினு ஆனந்த், குயிலி, பபிதா நடித்தார்கள். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இளையராஜா இசை அமைத்தார். தோட்டா தரணி அரங்குகள் நிர்மாணித்தார்.
மும்பை தாராவி பகுதியில் அதிக சக்தி வாய்ந்த மனிதராக இருந்த தமிழர் ஒருவரைப் பற்றிய கதை இது. சிறந்த நடிகர், ஆர்ட் டைரக்ஷன், ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காக 3 தேசிய விருதுகள் வென்ற இப்படம், தற்போது 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு கொண்டு வரப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள ‘நாயகன்’ படம், வரும் நவம்பர் 3ம் தேதி திரைக்கு வருகிறது.
இதுகுறித்து இப்படத்தை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் மதுராஜ், எஸ்.ஆர் பிலிம் பேக்டரி எஸ்.ஆர்.ராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதிய படங்கள் வெளியானாலும் கூட, வெற்றிகளைக் குவித்திருக்கும் பழைய வெள்ளிவிழா படங்களை தியேட்டரில் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு நாங்கள் வெளியிட்ட கமல்ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’ படம், 3 வாரங்கள் ஓடி வரவேற்பைப் பெற்றது. தற்ேபாது ‘நாயகன்’ படத்தை வரும் 3ம் தேதி 150 தியேட்டர்களில் வெளியிடுகிறோம்’ என்றனர். பேட்டியின் போது நடிகர் அரீஷ் குமார் உடனிருந்தார்.