சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றுப் படமாக ‘800’ உருவாகியுள்ளது. இதை மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் முரளிதரனாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ மதுர் மிட்டல், அவரது மனைவி மதிமலர் ராமமூர்த்தியாக மகிமா நம்பியார் நடித்துள்ளனர். எம்.எஸ்.பதி இயக்கிய இப்படத்தை 2022ல் புக்கர் பரிசு பெற்ற ஷெஹான் கருணாதிலக இணைந்து எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீடு மும்பையில் நடந்தது.
சச்சின் டெண்டுல்கர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். தேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத், ‘800’ படத்தின் அனைத்து மொழிகளுக்குமான விநியோக உரிமையை வாங்கியுள்ளார். முதலில் தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம் திரைக்கும் வரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நரேன், நாசர், வேல.ராமமூர்த்தி, ரித்விகா, வடிவுக்கரசி, அருள்தாஸ், ஹரி கிருஷ்ணன், சரத் லோகித்தஸ்வா நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.