சென்னை: தமிழில் ‘டிஷ்யூம்’, ‘மாத்தி யோசி’ உள்பட சில படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள சோமன் காஸ்ட்ரோ, தற்போது ‘XYZ’ என்ற படத்தை எழுதி இயக்கி தயாரித்துள்ளார். ஏற்கனவே இவர், ‘கடற்கரை’ என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். ‘XYZ’ குறித்து அவர் கூறுகையில், ‘பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் காதலர்களான ஹீரோவும், ஹீரோயினும் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்துகின்றனர்.
இந்நிலையில், ஹீரோவுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கிறது. தனது தந்தையிடம் ஆசிபெற ஊருக்கு காதலியுடன் வரும்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படம். கொல்கத்தா, மும்பை, புனே, அவுரங்காபாத் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வென்ற இப்படம், வெளிநாட்டு திரைப்பட விழாக்களுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘மிஸ்டர் மெட்ராஸ்’ வெங்கட், ஷர்வினி, மனோகர், கே.ஆர்.கண்ணன் நடித்திருக்கின்றனர். செல்வமும், சக்தியும் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றனர். வே.கிஷோர் குமார் இசையில் செங்கதிர் வாணன் பாடல்களை எழுதிஉள்ளார்’ என்றார்.