கடந்த 2015ல் கோபிசந்த், ராசி கன்னா நடிப்பில் வெளியான ‘ஜில்’ என்ற தெலுங்கு படத்தில் வில்லனாக அறிமுகமானவர், பாலிவுட் நடிகர் கபீர் துஹான் சிங். தமிழில் அஜித் குமாருக்கு வில்லனாக ‘வேதாளம்’ படத்தில் நடித்தார். பிறகு ‘றெக்க’, ‘அருவம்’, ‘ஆக்ஷன்’, ‘காஞ்சனா 3’, ‘தெற்கத்தி வீரன்’ உள்பட நிறைய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். கபீர் துஹான் சிங்கிற்கும், அவரது நீண்ட நாள் தோழி கணித ஆசிரியை சீமா சாஹல் என்பவருக்கும் டெல்லியில் திருமணம் நடந்தது.
இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டனர். தற்போது திருமண போட்ேடாக்களை வெளியிட்டுள்ள கபீர் துஹான் சிங், ‘இது பெற்றோர்கள் முடிவு செய்த திருமணம். என்னை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான ஆசையை நிறைவேற்றி வைத்துள்ளேன். தொடர்ந்து நான் சினிமாவில் கவனம் செலுத்துவேன். சீமா தொடர்ந்து ஆசிரியர் பணியைக் கவனிப்பார். எங்களை மனதார வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ என்றார்.