சென்னை: நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் விரைவில் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இதுகுறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் ‘ரத்னம்’ படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கி நடிக்கிறார். இதன் ஹீரோயின் முடிவாக வில்லை. பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ரஹ்மான், நாசர், ஜெயப்பிரகாஷ், கவுதமி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். கடந்த 2017 செப்டம்பர் 14ம் தேதி திரைக்கு வந்த ‘துப்பறிவாளன்’ படத்தை மிஷ்கின் இயக்கினார். விஷால், பிரசன்னா, விநய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா நடித்தனர். அரோல் கொரேலி இசை அமைத்தார்.
இதையடுத்து ‘துப்பறிவாளன் 2’ படத்தை மிஷ்கின் இயக்கினார். இதன் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. அப்போது திட்டமிட்டிருந்த பட்ஜெட்டை விட அதிகப்படுத்தி விட்டார் என்று மிஷ்கின் மீது புகார் கூறிய விஷால், பிறகு ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார். இதையடுத்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்ற மாட்டோம் என்று அறிவித்தனர். ‘செல்லமே’ படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பு, நடிகர் அர்ஜூன் இயக்கிய படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். தற்போது அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘துப்பறிவாளன் 2’ படத்ைத அவர் இயக்குகிறார்.