சென்னை: உதவி இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர், ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று பன்முகத்திறமை கொண்டவர், சித்தார்த். அதுபோல் நடனக்கலைஞர், நடிகை, பாடகி என்று பன்முகத்திறமை கொண்டவராக அதிதி ராவ் ஹைதரி இருக்கிறார். ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்குப் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அவர்கள், நெருங்கிய நட்புடன் பழகினர். பிறகு காதலித்தனர். சமீபத்தில் அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிலையில், தனது திருமணம் குறித்து சித்தார்த் கூறியதாவது: நானும், அதிதியும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வாய்க்கு வந்தபடி பேசினார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் ஒரு பெரிய விஷயத்தைச் செய்வதற்கும், ரகசியமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் அழைப்பு விடுக்காத நபர்கள் பலர், இதை ரகசியம் என்று சொல்கிறார்கள்.
ஆனால், எங்களுக்கு தெரிந்தவர்கள் அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றதால், அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியாகவே இருக்கிறது. படப்பிடிப்பை போன்று இதை எளிதாக எல்லோரிடமும் சொல்லிவிட முடியாது. பெரியவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே முடிவு செய்ய வேண்டும். திருமண தேதி குறித்து இரண்டு வீட்டில் இருக்கும் பெற்றோர்கள் முடிவு செய்வார்கள்.