சென்னை: கார் விபத்துக்குப் பிறகு சிகிச்சை பெற்று உடல்நிலை தேறியுள்ள யாஷிகா ஆனந்த், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதில், 24 மணி நேரத்தில் நடந்து முடியும் ஹாரர் கதை கொண்ட ‘சைத்ரா’ படமும் ஒன்று. இதில் அவர் பேய் வேடத்தில் நடித்துள்ளார். இதற்காக அவருக்கு வித்தியாசமான மேக்கப் போட சில மணி நேரங்கள் ஆனது. படப்பிடிப்பு முடிந்து பேய் மேக்கப்பைக் கலைப்பதற்கும் சில மணி நேரங்கள் ஆனது.
மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.மனோகரன், டி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகரன் மெய்யப்பன் இசை அமைத்துள்ளார். மணிகண்டன், விஜயலட்சுமி பாடல்கள் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஜெனித்குமார் இயக்கியுள்ளார். இவர், திரைக்கு வந்த ‘பொட்டு’, விரைவில் திரைக்கு வரும் ‘கா’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.