மார்வெல்ஸ் ஸ்டுடியோவின் சூப்பர் ஹீரோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அதிலும் ‘மிஸ் மார்வெல்’ தொடருக்குப் பிறகு பெண் சூப்பர் ஹீரோயின்களுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. இப்படமும் மிஸ் மார்வெல் தொடரின் தொடர்ச்சியாக வெளியாகியுள்ளது. இயக்குனர் நியா டக்கோசாவும், இசை அமைத்துள்ள லாரா கார்ப்மெனும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலா என்ற கிரகம் அழியும் நிலையில் இருக்கிறது. தனது கிரகத்தின் நிலையை மாற்ற நினைக்கிறார், அதன் தலைவி டெர்-பான். அதற்கு ‘குவாண்டம் பேன்ட்’ என்கிற இரண்டு சக்தி வாய்ந்த வளையல்கள் வேண்டும். அதை ஒன்றிணைத்தால் ஹாலா கிரகம் மீளும். ஆனால், கிரகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு குலைந்து போர் மூளும். வளையல்களில் ஒன்று டெர்-பானிடம் இருக்கிறது. இன்னொன்று, பூமியில் வசிக்கும் மிஸ் மார்வெல் கமலா கானிடம் இருக்கிறது. அதை அடைய கேப்டன் மார்வெல் (பிரி லார்சன்), மிஸ் மார்வெல் (இமான் வெல்லானி), மோனிகா ரெம்பியூ (தியோனா பாரீஸ்) ஆகியோருடன் டெர்-பான் மோதுகிறார். இதில் வெற்றிபெற்றது டெர்-பானா? மார்வெல்ஸ் சூப்பர் ஹீரோயின்களா என்பது மீதி கதை. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மிஸ் மார்வெல் கமலா கான், தனது குறும்புத்தனங்களால் கவர்கிறார். கேப்டன் மார்வெல் பிரி லார்சன், எதையும் தீவிரமாகச் சிந்தித்து செயல்படுகிறார். மோனிகா ரெம்பியூ, எல்லா விஷயத்துக்கும் உடனடி தீர்வு காண துடிக்கிறார். இப்படி வெவ்வேறு குணாதிசயம் கொண்டவர்கள் ஒன்றிணைந்து வில்லியை எதிர்கொள்கின்றனர். மார்வெல் படங்களில் வரும் பன்ச் டயலாக், காமெடி, பிரமாண்டமான காட்சிகள், அதிரடி சண்டைகள் இப்படத்திலும் உண்டு. ஆனால், சென்டிமெண்ட் ஏரியா ரொம்ப பலவீனமாக இருக்கிறது. ஹீரோயின்கள் 3 பேருக்கும் இடையே சண்டையும், ஜாலியும்தான் இருக்கிறதே தவிர வேறெதுவும் இல்லை. எனினும், மனிதர்கள் உள்பட எதைக்கண்டாலும் விழுங்கும் பூனைகள், பாடும் மக்களைக் கொண்ட கிரகம், வான் துளைகள் போன்ற சுவாரஸ்யங்களில் அந்தக் குறைகள் தெரியவில்லை. சூப்பர் ஹீரோயின் படங்களில் வில்லன்கள் பவர்ஃபுல்லாக இருப்பார்கள். இதில் வில்லியாக வரும் டெர்-பான் கேரக்டர் வலுவாக எழுதப்படவில்லை. முந்தைய படங்களை ஒப்பிடும்போது, அந்தளவுக்கு இல்லை என்றாலும், இரண்டு மணி நேர டைம்பாசுக்கு உத்தரவாதம் தருகிறது படம்.