மவுன குரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார், அடுத்து இயக்கியுள்ள படம், ‘ரசவாதி -தி அல்கெமிஸ்ட்’ . அர்ஜுன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன் ஜோடியாக நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம்.சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவத்தை மறக்க எண்ணி அமைதியாக கோடைக்கானலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் சதாசிவ பாண்டியன்(அர்ஜுன் தாஸ்) . இளம் சித்த மருத்துவராக எப்போதும் ஒரு மர்மமான மனநிலையுடன் இருக்கும் சதாசிவம் வாழ்க்கையில் தென்றலாக வருகிறார் சூர்யா (தான்யா ரவிசந்திரன்). மென்மையான காதல், சித்த மருத்துவம், மலைவாழ் வாழ்க்கை, எனச் சென்று கொண்டிருக்கும் சதா வாழ்க்கையில் குறுக்கிடுகிறார் ஒரு மனக்குழப்பம் நிறைந்த சைக்கோ காவலர் பரசு ராஜ் (சுஜித் சங்கர்). தனக்கும் , இந்தக் காவலருக்கும் என்னப் பிரச்னை எனப் புரியாத புதிராக வரும் இடையூறுகளை எல்லாம் எதிர்கொள்கிறார் சதா.
முடிவு என்ன என்பது மீதிக் கதை. சாந்தகுமார் படங்கள் என்றாலே கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒரு வித்யாசக் கோணத்தில் இருக்கும். நாயகி உட்பட அசாதாரண பின்னணி, மேனரிசம் என்றிருப்பர். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. எப்போதும் போதை, ஆக்ஷன், அதிரடி என்றே தன் கணீர் குரலால் கத்திக்கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் மென்மையாக , காதல், டூயட், ரொமான்ஸ் என தனது குரலுக்கு மற்றொரு முகம் கொடுத்திருக்கிறார். பொறுமையான நடிப்பு, அமைதியான வசனம் என அர்ஜுன் தாஸ்க்கு இந்தப் படம் ஒரு வித்யாசமான கதை. தான்யா ரவிசந்திரன் மேக்கப்பில்லா முகம் , இயற்கையான நடிப்பு, உடன் வெட்கம் என மனதைத் தொடுகிறார். இன்னொரு நாயகியான ரேஷ்மா வெங்கடேஷ் நடனம், குறும்பு, துறுதுறுப்பு, உடன் தவிப்பு, சோகம் என யார் இந்தப் பொண்ணு எனக் கேட்க வைக்கிறார்.
நாயகிகள் இருவருமே வழக்கமான நாயகிகளாக இல்லாமல் இரண்டு பேரும் கதைக்குள்ளும், மேலும் நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார்கள். சுஜித் சங்கர் தமிழ் சினிமாவின் பயமுறுத்தும் காவலதிகாரிகள் பட்டியலில் நிச்சயம் இடம் பிடிப்பார். மனிதர் நடிப்பும், அவரின் கண்களும் , வித்யாசமான மேனரிசமும் புதுமையான நடிகராக தெரிகிறார். ‘மௌனகுரு‘ என்னும் அற்புதமான படைப்பைக் கொடுத்த சாந்தகுமார் இயக்கம் என்கையில் இந்தப் படத்திற்கு அதீத எதிர்பார்ப்புகள் இருந்தன.
எனினும் திரைக்கதையில் வித்யாசமான முயற்சிகள், டெம்ளேட்டுகள் கொடுத்தவர் கதையிலும் இன்னும் புதுமை சேர்த்திருக்கலாம். இவ்வளவுதானா என்னும் கதை, பிளாஷ்பேக் என கொஞ்சம் சலிப்பூட்டுக்கின்றன. படத்தின் நீளமும் சற்று அதிகம். மெதுவான கதை சொல்லல் போன்ற மைனஸ்களை குறைத்திருக்கலாம். சரவணன் இளவரசு ஒளிப்பதிவில் கோடைக்கானல் அழகும், இரவும், பகலும், உடன் காதல் காட்சிகளும் என நம்மை ஒருசில நிமிடங்கள் எங்கோ கடத்துகின்றன. தமன் இசையில் இயற்கை மேலும் மின்னுகிறது. மொத்தத்தில் இயக்குநர் சாந்தகுமார் பாணி திரைக்கதையில் வழக்கமான கதையாக என்னவோ குறைகிறதே, ‘மௌனகுரு ’ பெஞ்ச்மார்க் எங்கே என்னும் கேள்வி எழ வைக்கிறது இந்த ‘ரசவாதி -தி அல்கெமிஸ்ட்‘.