மும்பை: சூர்யாவுக்கு ஜோடியாக தேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார். ஆமிர்கான் நடித்த ரங்தே பசந்தி படத்தை இயக்கியவர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா. இவர், மகாபாரதம் புராணத்திலிருந்து சில பகுதிகளை இரண்டு பாகமாக உருவாக்க உள்ளார். இதில் முக்கிய வேடத்தில் சூர்யா நடிக்க சம்மதித்துள்ளார். அவருடன் சில பாலிவுட் நடிகர்கள், தெலுங்கு நடிகர்களும் நடிக்கிறார்கள். பான் இந்தியா படமாக இது உருவாகிறது. இந்நிலையில் சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தேவாரா தெலுங்கு படத்தில் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக ஜான்வி கபூர் நடித்து வருகிறார். தமிழில் ஏற்கனவே சில படங்களில் நடிக்க கேட்டு, ஜான்வி மறுத்து வந்தார். இந்நிலையில் இப்போது இந்த படத்தில் நடிக்க அவர் கால்ஷீட் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது.