இந்தியில் ஆமிர் கான் நடித்த ‘தங்கல்’ படத்தில், அவரது மகள்களில் ஒருவராக நடித்தவர் சான்யா மல்ஹோத்ரா. பிறகு ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’, ‘பதாகா’, ‘லூடு’, ‘லவ் ஹாஸ்டல்’, ‘கதல்’ உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானின் ஆர்மியில் ஒரு போராளியாகவும், டாக்டராகவும் நடித்திருந்தார். அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கிடையே அவர் தமிழ்ப் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் ‘ஜவான்’ படத்தில் நடித்தபோதுதான் தமிழ் சினிமா பற்றி தெரிந்துகொண்டேன்.
படப்பிடிப்புத் தளங்களில் தமிழ் டெக்னீஷியன்கள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவதைப் பார்த்து வியந்தேன். ‘ஜவான்’ படத்தின் கதையே எனக்குப் புதிதாக ெதரிந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் பணியாற்றும் நல்லதொரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பாலிவுட்டில் இருந்து பலர் தமிழ் சினிமாவுக்கு சென்று வெற்றிபெற்றது பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். நல்ல கதை அமையும்போது தமிழில் நடிப்பேன்’ என்றார்.