சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த 2022ல் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘திருச்சிற்றம்பலம்’. இதை மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கினார். தற்போது சன் பிக்சர்ஸ் சார்பில் சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் மிகப் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள புதுப்படத்துக்கு ‘ராயன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை தனுஷ் இயக்கி நடித்துள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 50வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நேற்று மாலை 6 மணிக்கு சன் பிக்சர்ஸின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்தில் தனுஷ், பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி.கே எடிட்டிங் செய்ய, பீட்டர் ஹெய்ன் சண்டைப் பயிற்சி அளித்துள்ளார். ஜாக்சன் அரங்குகள் அமைத்துள்ளார். வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்து விட்டதாக தனது எக்ஸ் தளத்தில் தனுஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை வெளியான ‘அடங்காத அசுரன் தான்’ என்ற இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தனுஷ் எழுதி, பாடியிருக்கும் இப்பாடலுக்கு பிரபுதேவா நடனக்காட்சி அமைத்துள்ளார்.
இந்த பர்ஸ்ட் சிங்கிளை தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் அதிவேகமாகப் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். கடந்த 2017ல் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம், ‘ப.பாண்டி’. இதில் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா, மடோனா செபாஸ்டியன் நடித்தனர். தற்போது உருவாகியுள்ள ‘ராயன்’, தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள 2வது படமாகும்.