சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக இருந்தார், பின்னர் சீரியலில் நடித்தார். அதன்பிறகு இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் படத்தின்மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து மான்ஸ்டர், ஓமணப்பெண்ணே, யானை, கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இந்தியன் 2, டிமாண்டி காலனி பாகம் 2 போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் மருத்துவமனையின் புற்றுநோய் மையம் சார்பில் கொண்டாடப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அதில் அவர், ‘கடந்த வருடம் எனது அம்மாவுக்கு கேன்சர் கண்டறியப்பட்டது. அப்போது என்னையும் பரிசோதனை செய்துகொள்ள சொன்னார்கள். என் அம்மாவை இழக்க விரும்பாத நான், விரைவில் குணமடைந்துவிடுவீர்கள் என அவருக்கு நம்பிக்கை ஊட்டுவேன். அது ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டதால் எளிதில் சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவர்களை நம்புங்கள்’ என்றவர், தனது அம்மாவை பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார். இது பார்வையாளர்களை கண்கலங்க செய்தது.