சென்னை: திரைக்கு வந்த ‘ட்ரிப்’ என்ற படத்தை எழுதி இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் தற்போது எழுதி இயக்கிய படம், ‘தூக்குதுரை’. இதில் யோகி பாபு, இனியா, மகேஷ், சென்ராயன், பாலசரவணன், ‘கும்கி’ அஸ்வின், சத்யா, மாரி முத்து நடித்துள்ளனர். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் தயாரித்துள்ளனர். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்ய, மனோஜ் கே.எஸ் இசை அமைத்துள்ளார். படம் குறித்து டென்னிஸ் மஞ்சுநாத் கூறியதாவது:
இப்படத்தை வரும் பிப்ரவரி 9ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டோம். அதற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படங்கள் நிறைய ரிலீசாகிறது என்பதால், உடனே நாங்கள் எடுத்த முடிவுதான், இம்மாதம் 25ம் தேதியே ரிலீஸ் செய்துவிடுவது என்பது. கிராமத்திலும், நகரத்திலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். வன்முறைக் காட்சிகள் இருக்காது. தியேட்டரில் குடும்பத்துடன் அமர்ந்து ஜாலியாக படத்தைப் பார்த்து ரசிக்கலாம்’ என்றார். மகேஷ் கூறுகையில், ‘எனது 15 வருட கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. இது நான் ஹீரோவாக அறிமுகமாகும் படம். டி.வி தொடரில் நடித்து வந்த என்னை நம்பி வாய்ப்பு கொடுத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை நான் கண்டிப்பாக காப்பாற்றுவேன்’ என்றார்.