மும்பை: பாலிவுட்டிலுள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர், கத்ரீனா கைஃப். இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். இந்தியில் உருவாக்கப்பட்டு, பிறகு தமிழில் டப்பிங் செய்யப்பட்டிருந்த ‘மெரி கிறிஸ்துமஸ்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி யுடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த 2021 டிசம்பர் 6ம் தேதி கத்ரீனா கைஃப், பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் காதல் திருமணம் நடந்தது.
தற்போது கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியில் விக்கி கவுசல், ‘அனிமல்’ திரிப்தி டிம்ரி நடித்துள்ள ‘பேட் நியூஸ்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. ஆனந்த் திவாரி இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விக்கி கவுசலிடம், கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக இணையதளங்களில் வெளியாகும் தகவல் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு சூசகமாகப் பதிலளித்த விக்கி கவுசல், ‘ஒரு நல்ல செய்தியை, மிகச்சரியான நேரத்தில் உலகத்துடன் பகிர்ந்துகொள்வேன்’ என்றார்.