விமர்சனம்
தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர் சாஃப்ட்வேர் இன்ஜினியர் விஜய் கனிஷ்கா. அவரது அம்மா சித்தாரா, தங்கை அபி நட்சத்திரா. திடீரென்று ஒருநாள் சித்தாராவையும், அபி நட்சத்திராவையும் மாஸ்க் அணிந்த ஒரு மர்மநபர் கடத்திச் சென்று துன்புறுத்துகிறான். பிறகு அவன், விஜய் கனிஷ்காவை மிரட்டி, இரண்டு கொலைகளை அடுத்தடுத்து செய்யச் சொல்லி கட்டளையிடுகிறான். உயிர்களைக் கொல்லக்கூடாது என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் விஜய் கனிஷ்கா, அந்த கொலைகளைச் செய்தாரா? மாஸ்க் மேன் யார்? அவன் கொலை செய்யச் சொன்ன இரண்டு பேர் யார்? என்பதற்கெல்லாம் பதில் சொல்கிறது படம். சைவ உணவு மட்டுமே சாப்பிட்டு, மிகவும் பயந்த சுபாவம் கொண்ட இளைஞன் வேடத்தில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ள விஜய் கனிஷ்கா (இயக்குனர் விக்ரமன் மகன்), முழுமையான தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். மாஸ்க் மேனிடம் சிக்கி உயிருக்குப் போராடும் தனது அம்மா சித்தாராவையும், தங்கை அபி நட்சத்திராவையும் காப்பாற்றப் போராடும் அவரது துடிப்பான நடிப்பு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு ஜோடி, டூயட் கிடையாது. ஆக்ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.
பெரிய ரவுடி ‘கேஜிஎஃப்’ கருடா ராமச்சந்திரனை அவரது வீட்டுக்கே சென்று மிரட்டும் கம்பீரமான அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனர் சரத்குமாரின் கேரக்டர் வலுவானதாக இருப்பது படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கிறது. இரண்டாம் பாதியில் அவருக்கான சண்டைக் காட்சி ரத்தத்தை சூடேற்றுகிறது. ஹீரோவுக்கு உதவும் அவரது கேரக்டர் படத்தின் இன்னொரு தூண் என்று சொல்லலாம். கவுதம் வாசுதேவ் மேனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி, சித்தாரா, அபி நட்சத்திரா ஆகியோரின் கேரக்டர்கள் படத்துக்கு மேலும் வலு சேர்த்துள்ளன. இறுதியில் முகமூடி மனிதன் யார் என்று தெரியும்போது, பலத்த அதிர்ச்சி. அவர் சொல்லும் விளக்கம் நியாயமாக இருந்தாலும் பாடி லாங்குவேஜில் தடுமாறுகிறார். பாலசரவணன், முனீஷ்காந்த், ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். படத்தை சூர்யகதிர் காக்கள்ளார், கே.கார்த்திகேயன் இணைந்து இயக்கியுள்ளனர். மருத்துவமனைக் காட்சிகள் உயிரோட்டமாகப் படமாக்கப்பட்டுள்ளன. சி.சத்யாவின் பின்னணி இசை படத்துக்கு பலம். கே.ராம்சரணின் கேமரா, காட்சிகளின் வீரியத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது. விஜய் கனிஷ்காவின் திரைப்பயணத்துக்கு நல்லதொரு தொடக்கம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ஷன் திரில்லராக படம் ஈர்க்கிறது.