மிகச்சிறந்த கல்வி வள்ளல் என்ற நற்பெயருடன் பல கல்லூரிகளையும், பள்ளிகளையும் நடத்தி வரும் தியாகராஜனின் ஒரு பள்ளியில் பி.டி ஆசிரியராகப் பணியாற்றுகிறார், ஹிப்ஹாப் தமிழா ஆதி. பிரச்னை என்றால் எதிர்த்து கேள்வி கேட்காமல், தன் அம்மா தேவதர்ஷினியின் அதட்டலுக்குப் பயந்து பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார். இந்நிலையில், எதிர்வீட்டிலுள்ள இளவரசு, வினோதினி வைத்தியநாதனின் மூத்த மகள் அனிகா சுரேந்திரனுக்கு, அவர் படிக்கும் கல்லூரி நிர்வாகத்தில் பிரச்னை ஏற்பட்டு டிஸ்மிஸ் செய்யப்படுவதாக எச்சரிக்கப்படுகிறார். இதிலிருந்து அவர் மீள ஒரு வழி சொல்லப்படுகிறது. இதனால், தன்மானத்துக்குப் பயந்த அனிகா சுரேந்திரன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அதன் பின்னணியை அறிந்த ஹிப்ஹாப் தமிழா ஆதி, அம்மாவின் கட்டளையை மீறி என்ன செய்கிறார் என்பது மீதி கதை.
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ கார்த்திக் வேணுகோபாலன் சமூக அக்கறையுடன் இயக்கியுள்ளார். வெளியே சில ஆண்களால் பிரச்னைகளை எதிர்கொள்ளும் பெண்கள், அதை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடினால்தான் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை அன்றாடம் சந்திக்கும் சில கசப்பான அனுபவங்களை படம் சொல்கிறது. தவிர ‘குட் டச்’, ‘பேட் டச்’ எது என்பதை வலியுறுத்துகிறது. விளையாட்டு ஆசிரியராக துள்ளலாக நடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தன் தங்கை போன்ற அனிகா சுரேந்திரனுக்கு ஏற்பட்ட கொடுமைக்கு எதிராகப் புறப்படும்போது, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. தன் மனைவி காஷ்மீரா பர்தேஷி, மாமனார் வழக்கறிஞர் பிரபுவுடன் இணைந்து கோர்ட்டில் போராடும்போது, சமூக அக்கறையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். எதிரிகளை அவர் துவம்சம் செய்யும் காட்சிகள், நாடி நரம்புகளை முறுக்கேற்றுகிறது. அனிகா சுரேந்திரன்தான் கதையின் நாயகி என்று சொல்லலாம். நடிப்பில் உருக வைத்திருக்கிறார்.
காஷ்மீரா பர்தேஷிக்கு அதிக வேலையில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியாகராஜன் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார். வக்கீல் பிரபு, நீதிபதி கே.பாக்யராஜ் மற்றும் ஆர்.பாண்டியராஜன், இளவரசு, வினோதினி வைத்தியநாதன், பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, முனீஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு, படத்தை மேலும் தாங்கி நிற்கிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் இது 25வது படம் என்பதால், பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் அதிக அழுத்தம் தெரிகிறது. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சியின் திடீர் திருப்பங்கள், படத்தை தாங்கி நிற்கும் தூண்கள். காட்சிகளுக்கான வீரியத்தை ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் திரையில் இயல்பாகப் பதிவு செய்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் அத்துமீறல்களை, மற்ற போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பதை இன்னும் எத்தனை படங்களில் பார்ப்பதோ? நீதிபதியை காமெடியாக காட்டியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.